நான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் .
அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
நேரில் பார்த்தவர்களுக்கு அந்த பூங்கா பற்றி நன்றாக தெரிந்திருக்கும் . சென்னைகுள் ஒரு காடு உள்ளது என்றால் அது வண்டலூர்தான். நல்ல அடர்த்தியான மரங்கள் உள்ள இடம் என்பதால் நல்ல மற்றும் கள்ள காதலர்களின் டாப் டென் வரிசையில் வண்டலூர் எப்போதும் முதலிடம் வகிக்கும் .
பிற்பகல் இரண்டு மணி நல்ல உச்சி வெயில். மரங்கள் சூழ்ந்த இடம் என்பதால் வெயில் அவ்வளவாக தெரியாது நல்லா உண்ட களைப்பு தீர ஒரு மரத்தடியில் என்னுடன் வந்த நண்பர்களில் ஒருவன் குட்டி தூக்கம் போட்டான் .
எனக்கு தூக்கம் வரவில்லை அதனால் முழித்திருந்த இன்னொருவனையும் கூட்டி கொண்டு அப்படியே ஒரு நடை போட்டு வரலாம் என்று கிளம்பினேன் .
லயன் சபாரி செய்யும் இடம் மிகவும் அடர்ந்த காடுபோல் இருக்கும் . நண்பகல் என்பதால் பயங்கர நிசப்தம் அப்போது காட்டுக்குள் யாரோ வேகமாக ஓடிவரும் சத்தம் கேட்டது . சத்தம் வந்த திசை நோக்கி நாங்கள் இருவரும் சென்றோம் அருகில் செல்ல செல்ல முச்சிரைக்கும் சத்தம் பெரிதாக கேட்டது.
அப்போது புதருக்கு பின்னால் இருந்து ஒரு பதினைந்து வயது மதிக்க தக்க இளம் பெண் வேகமாக ஓடிவந்தாள் .
வேகமாக வந்து என்மேல் மோதி என்னை பின்னால் இருக்க பிடித்து கொண்டால் . அவள் உடல் நடுங்குவது அவள் இதய துடிப்பின் வேகம் மற்றும் அவள் ஓடிவந்த வேகம் அவள் மூச்சிரைப்பின் மூலம் நன்றாக புரிந்தது. யாருக்கோ பயந்து இப்படி நடுங்குகிறாள் என்று புரிந்தது .
அவளை மெல்ல ஆசுவாசபடுத்தி அவள் முதுகை தடவி பயபடாதே நான் இருக்கிறேன் என்ன ஆயிற்று என்று கேட்டேன். அவள் எவ்வளவோ பேச முயற்சித்தும் அவள் வாயில் இருந்து வார்த்தை வரவில்லை உடல் முழுவதும் ஒவ்வொரு மில்லி மீட்டரும் நடுங்கி கொண்டிருந்தது . என் பைகுள் கையை விட்டு என் செல் போனை எடுத்து யாருக்கோ போன் செய்ய முயற்சித்தாள் . அவள் விரல்கள் அதற்க்கு ஒத்துழைக்க வில்லை மீண்டும் போனை என்கையில் குடுத்துவிட்டு பரிதாபமாக பார்த்தாள்.
.
என் நண்பன் உடனே தன் கையில் இருந்த குளிர்பானத்தை அவளிடம் குடுத்து குடிக்க சொன்னான் .
அப்போது நான் அவளை கவனித்தேன் அவள் காலில் செருப்பு இல்லை. அவள் உடை ஓரளவு வசதியானவள் என்று காட்டியது .உடம்பில் ஆங்காங்கே முற்கள் குத்திய காயம் இருந்தது .
அவள் ஓடிவந்த திசை நோக்கி சில அடி தூரம் நடந்து பார்த்தேன் ஒன்றும் தென்படவில்லை.
மீண்டும் திரும்பி வந்தபோது அவள் ஓரளவு தெளிவாக இருந்தால் என் நண்பனிடம் பேசி கொண்டிருந்தாள் .
என்னை பார்த்ததும் எழுந்து வந்து அண்ணா என்னை எப்படியாவது வெளியே கொண்டு விட்டு விடுங்கள் என்று கதறினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை உன் பிரெச்சனை என்ன சொல் நான் இருக்கும் போது எந்த ஆபத்தும் வராது தைரியமாக இரு என்று சொன்னேன் .
அவள் சொன்னதை கேட்டு நானும் என் நண்பனும் கோவத்தின் உச்சிக்கு சென்று விட்டோம் .
அப்படி என்ன சொன்னால் என்று தெரிய வேண்டுமா ?
அவள் ஒரு ப்ளஸ் 2 மாணவி அவள் காதலனுடன் வண்டலூருக்கு வந்திருக்கிறாள் . அவனும் அவளுடன் படிக்கும் மாணவன்தான். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத லயன் சபாரி இடத்தில அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள் . அப்போது அவன் அவளுக்கு முத்தம் குடுக்க முயற்சி செய்திருக்கிறான் . இதை அங்கு வந்த காவலர் ஒருவர் பார்த்துவிட்டார் . அவர் இருவரையும் பிடித்து மிரட்டி இருக்கிறார் . அந்த பையனை ஜெயிலில் போட்டு விடுவேன் என்று மிரட்டி அடித்து விரட்டி விட்டார் .
இந்த பெண்ணை மட்டும் பிடித்து கொண்டு உன்னை போலீசில் ஒப்படைக்க போகிறேன். விபச்சாரம் செய்தாய் என்று உன்னை உள்ளே போட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் .
ஐயா என்னை விட்டு விடுங்கள் இனிமேல் இந்தமாதிரி தனியாக வரமாட்டேன் என்று கெஞ்சி இருக்கிறாள் .
சரி அப்படி என்றால் என்னோடு வா என்று அழைத்து போயிருக்கிறான் .அங்கே அவனோடு இன்னொரு கபோதியும் சேர்ந்து கொள்ள இவளுக்கு பயம் வந்துவிட்டது. என்னை எங்கே கூட்டி போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறாள் .
உன்னை போலீசில் பிடித்து குடுக்க வேண்டாம் என்றால் எங்களோடு ஒரு பத்து நிமிடம் ஜாலியாக இரு இல்லை என்றால் விபச்சார கேசில் உள்ளே இரு எப்படி விருப்பம் என்று எச்சில் ஒழுக அந்த நாய் கேட்டிருக்கு . இவள் மறுக்கவே பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார்கள் .
அவர்களை தள்ளி விட்டு தப்பி வந்து வழி தெரியாமல் ரொம்ப நேரம் சுற்றி எங்களை பார்த்திருக்கிறாள் .
அவளிடம் அவள் காதலன் நம்பர் வாங்கி பேசினேன் .அவனும் பயந்து போய் பூங்காவிற்கு வெளியே காத்திருந்தான் .
பயபடாதே பத்திரமாக இருக்கிறாள் நான் வெளியே கூட்டி வருகிறேன் என்று சொன்னேன் .
வெளியே வரும் வழியில் இரண்டு காவலர்கள் யாரையோ தேடுவது போல் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தனர்
நான் அந்த பெண்ணிடம் கேட்டேன் உன்னை பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் உனக்கு அடையாளம் தெரியுமா ?
தெரியும் அதோ இருக்கிறான் என்று ஒருவனை காட்டினாள் அவனுக்கு சத்தியமாக ஐம்பது வயது இருக்கும் .
நான் அவள் கையை பிடித்து கொண்டு என்னோடு வந்து அவனை நேராக அடையாளம் காட்டு என்று இழுத்து சென்றேன். அவள் அண்ணா வேண்டாம் என்னை பத்திரமாக வெளியே கொண்டு விடுங்கள் போதும் என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள் . நான் இவளை கூட்டி கொண்டு வருவதை பார்த்த அந்த காவலர்கள் வேகமாக தங்கள் பைக் ஸ்டார்ட் செய்து அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார்கள் .
என் நண்பனும் அந்த பெண் சொல்வது தான் சரி அதன் வாழ்க்கை பாதிக்கும் அதனால் விட்டு விடு என்று சொன்னான் .
எனக்கும் அது சரியாக பட்டது .
அவளை வெளியே கூட்டி வந்தேன் அங்கே அவள் காதலன் என்று சொல்ல கூடிய பொடியன் நின்று கொண்டிருந்தான்
எனக்கு அந்த காவலன் மேல் இருந்த கோவத்தை இவன் மேல் இறக்கி வைத்தேன் . இடது கன்னம் மட்டும் லேசாக வீங்கியது புத்திமதி சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தேன் .
இன்னும் வண்டலூரில் அந்த மிருகம் வேலை செய்கிறது எத்தனை பயந்த அப்பாவி பெண்களை அது வேட்டையாடி இருக்குதோ இல்லை இன்னும் எத்தனை பேரை வேட்டையாட காத்திருக்குதோ ?
நீங்களே சொல்லுங்கள் அந்த மிருகத்தை என்ன செய்யலாம் என்று .