Monday, June 25, 2012

ராஜா என்றாலே இப்படிதானா...?

v

என் கல்லூரி நாட்களில் ராஜா என்று எனக்கு ஒரு நண்பன் இருந்தான் . அவனை ராஜா என்றால் கல்லூரியில் யாருக்கும் தெரியாது . ஏன் அவனுக்கு கூட அது பிடிக்காது கிறுக்கு ராஜா என்றால் அனைவருக்கும் தெரியும் .அவன் கூட போனில் பேசும் போது மாப்பிளே நான் கிறுக்கு ராஜா பேசுறேன் என்றுதான் ஆரம்பிப்பான் . ஆரம்பத்தில் இந்த பெயர்காரணம் எனக்கு புரியாமல்தான் இருந்தது அந்த சம்பவம் நடக்கும் வரை .

நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என் அறையில் தங்கி இருந்த முதலாம் ஆண்டு மாணவன் ஒருவனை நள்ளிரவு வந்து அடித்து இழுத்து சென்றார்கள் சீனியர் மாணவர்கள் .ஏன் என்று கேட்டதற்கு அவன் ராகிங் செய்த சீனியர் மாணவன் ஒருவனை அடித்து விட்டானாம் இருந்தாலும் அவனை காப்பாற்ற முயற்சி செய்த எங்களை தள்ளி விட்டு கடத்தி கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் ஒரு இருபது பேருக்கு மேல் இருந்தார்கள் அதனால் எங்களால் தடுக்க முடியவில்லை . சீனியர் ,மானவர்கள் தங்கி இருந்த மேன்சன்க்கு அவனை கொண்டு சென்றதாக கேள்வி பட்டு என் நண்பர்கள் சில பேரை திரட்டி அந்த மூன்று மாடி கட்டடத்தின் கீழே நின்று மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசித்து கொண்டிருந்தேன் . அப்போது அங்கு வந்து சேர்ந்தான் கிறுக்கு ராஜா.

மாப்பிளே நீ மட்டும் என் கூட வா நாம ரெண்டு பெரும் உள்ளே போகலாம் . மற்றவர்கள் கீழே இருக்கட்டும் . நீதான் நல்லா பேசுவ வா உள்ளே போகலாம் என்றான் . எனக்கும் அது சரி என்று பட்டது எல்லோரும் உள்ளே போனால் சண்டைக்கு வருவதாக புரிந்து கொண்டு கைகலப்பு நடக்க வாய்புள்ளது அதனால் நானும் கிறுக்கு ராஜாவும் உள்ளே செல்ல முடிவெடுத்தோம் . இரண்டாவது மாடியை அடைந்தவுடன் என்னை இருட்டில் ஒரு ஓரமாக நிறுத்தினான் கிறுக்கு ராஜா இடுப்பில் இருந்து ஒரு முழ நீளம் உள்ள கத்தியை எடுத்து என் கையில் குடுத்து வச்சிக்க மாப்பு என்று கையில் திணித்தான் . நான் அதிர்ந்து விட்டேன் அட கிறுக்கா நாம பேச்சு நடத்த வந்திருக்கோம் சண்டைக்கு அல்ல அவர்கள் முப்பது பேர் இருக்கிறார்கள் . கத்தியோடு உள்ளே போவது நாமளே அவர்களுக்கு ஆயுதம் கொண்டு போய் குடுப்பதற்கு சமம் என்று சொல்லி அவன் கத்தியையும் பிடுங்கி அங்கிருந்த கழிவறையில் ஒளித்து வைத்து நல்லபடியாக பேச்சு நடத்தி அந்த மாணவனை மீட்டு கொண்டு வந்தேன் . இந்த முட்டாள் அன்று என்னிடம் கத்தியை காட்டாமல் உள்ளே எடுத்து வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

இரண்டாவது ராஜா

சத்தியம் தொலைகாட்சியில் பதிவர்களை வைத்து நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி செய்ய திட்டம் இட்டபோது பிலாசப்பி மூலமாக அறிமுகம் ஆனவர் இந்த ராஜா பெயர் அக்கப்போர் ராஜா என்று சொன்னார் . முதல் நேரடி நிகழ்ச்சிக்கு இவரை பரிந்துரைத்தேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு நேரடி நிகழ்ச்சி கார் அனுப்புவார்கள் வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு நிம்மதியாக என் வேலையே பார்த்துகொண்டிருந்தேன் .மறுநாள் காலை 8 :30  மணிக்கு அக்கப்போர் ராஜாவிடம் இருந்து எனக்கு போன். எனக்கு தலை வலிக்கிறது என்னால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது வேறுயாரையாவது நீ ஏற்பாடு செய்துகொள் என்று சொல்லி இணைப்பை துண்டித்து விட்டார் . இன்னும் அரைமணி நேரத்தில் ஆரம்பிக்க போகும் நேரடி ஒளிபரப்பிற்கு யாரை தேடுவது ? கடுமையான மன உளைச்சலில் நடை முறை சாத்தியம் இல்லாத முயற்சியை செய்து கொண்டிருந்தேன் . நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் சரியாக வந்து சேர்ந்தார் அக்கப்போர் என்ன செல்வின் டென்சன் ஆயிட்டீங்களா ? சும்மா தமாசு பண்ணேன் என்று சொல்லிவிட்டு அவர் சிரித்த சிரிப்பை என்னால் அன்று இருந்த மன நிலையில் ரசிக்க முடியவில்லை .

கடந்த வெள்ளி  இரவு 11 மணிக்கு அக்கபோரிடம் இருந்து போன் வந்தது . செல்வின் நீ தான் நான் பேசும் கடைசி நபர் என் காதலி என்னை ஏமாற்றி விட்டால் நான் விஷம் குடிக்க போகிறேன் . லெட்டர் எழுதி வைத்துவிட்டேன் நீதான் எல்லாத்தையும் கவனித்துகொள்ளவேண்டும் .உன்னையும் சிவாவையும் மட்டும் நான் நம்பி இருக்கேன் என்றார் .
இதை நம்பலாமா வேண்டாமா என்று மனதின் ஓரத்தில் சந்தேகம் எழுந்தாலும் அசட்டையாக கையாளும் விஷயம் இது இல்லை என்பதால் அவரை சமாதானம் படுத்தும் நோக்கோடு நான் பேசிகொண்டிருந்தேன் .திடீர் என்று இணைப்பை துண்டித்து விட்டார் .

நான் பதட்டத்தோடு உடனே கேபிள் அண்ணனுக்கு போன் செய்தேன் . என்னிடம் விளையாடி இருந்தால் அவரிடமாவது உண்மையை சொல்லிவிடுவார் என்று நம்பினேன் . இரு செல்வின் நான் போன் செய்து பார்க்கிறேன் என்று கேபிள் அண்ணன் சொன்னார் .சிலநிமிடத்தில் கேபுளிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அவன் உண்மையை தான் சொல்றமாதிரி இருக்கு அவன் தங்கி இருக்கும் இடம் தெரியுமா என்று கேட்டார் . எனக்கு தெரியும் நீங்கள் திருவல்லிக்கேணி ரத்னா கபே வந்துவிடுங்கள் . நான் உடனே கிளம்பி வருகிறேன் என்று சொல்லி அடுத்த பத்தாவது நிமிடம் நான் ரத்னா கபேயில் இருந்தேன் . அப்படி என்றால் என்ன வேகம் இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ரத்னா கபே வாசலில் நின்று கொண்டிருந்தார் கேபுள் . நான் சென்ற உடன் பதட்டத்தோடு இருந்தவர் இப்போதுதான் ஒரு 108 ஆம்புலன்ஸ் இந்த பக்கமாக சென்றது என்றார் . அது இன்னும் என் பதட்டத்தை அதிகரித்தது .
சரி என்று அவரை கூட்டிக்கொண்டு முருகேசன் நாயக்கர் மேன்சன் சென்றேன் . அங்கு அக்கபோரின் அறையை கண்டுபிடித்து எட்டிப்பார்த்தால் மனிதர் நிம்மதியாக அமர்ந்து பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தார் . எங்களை பார்த்ததும் அட என்னப்பா உண்மைன்னு நம்பிட்டீங்களா.? என்ன கேபுள் அண்ணே நீங்க கூட நம்பீட்டீங்களா என்று யாரும் ரசிக்கமுடியாத சிரிப்பை மீண்டும் சிரித்தார் . எனக்கு வந்த கோபத்திற்கு கையில் வைத்திருந்த ஹெல்மட்டை தூக்கி எறிந்தேன் அது அவர் மேல் படவில்லை கோவத்தில் அசிங்கமாக திட்டி விட்டு நானும் கேபுளும் கிளம்பி விட்டோம் . மனம் சகஜ நிலையை அடைய சில மணி நேரம் ஆனது .

இப்படி தேவை இல்லாமல் மற்றவர்களுக்கு மன அழுத்தம் குடுத்து அதில் மகிழ்ச்சி காணும் நபர்களை என்னதான் செய்வது அவர்களை தவிர்ப்பதை தவிர ........ 

Popular Posts